கும்பகோணம் அடுத்த அசூர்- நீலத்தநல்லூர் செல்லும் சாலை சேதமடைந்து கரடுமுரடாக மாறியதால் தினம்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த நீலத்தநல்லூர்- மதனத்துார் இடையில் 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் தஞ்சை- அரியலுார் மாவட்டத்தை இணைக்கும் பாலமாகும். கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்பவர்கள் அணைக்கரை வழியாக 50 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் மதனத்தூர் வழியாக ஜெயங்கொண்டம் வழியாக சென்றால் 50 கிலோ மீட்டர் தூரம் குறைவாகும். அதனால் சென்னை செல்லும் பேருந்துகள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், லாரிகள், காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் நீலத்தநல்லூர் சாலையில் சென்று வந்தனர். சமீபத்தில் அணைக்கரை பாலம் வழுவிழந்ததால் சென்னை செல்லும் கனரக வாகனம் முதல் இலகுரக வாகனங்கள் நீலத்தநல்லூர் சாலை வழியாக சென்று வருவதால் கடிச்சம்பாடி, அசூர், தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர் பகுதியில் உள்ள குறுகலான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அசூர் சாலையில் கனரக வாகனங்கள், அதிக பாரத்துடன் செல்லும் மணல் லாரிகள், அரியலுார் மாவட்டத்துக்கு நிலக்கரி எடுத்து செல்லும் லாரிகள் என தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அசூரில் இருந்து நீலத்தநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இதுபோன்ற அபாய நிலையில் இருப்பதால் தினம்தோறும் விபத்துகள் நடந்து வருகிறது.எனவே சென்னை செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் அசூர்- நீலத்தநல்லூர் சாலையை அகலப்படுத்தி தரமாக தார்ச்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.